சிறுவானூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே உள்ள சிறுவானுார் திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. திருவள்ளூர் வட்டம், சிறுவானுாரில், திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, 20ம் தேதி, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை மற்றும் யாகசாலை நிர்மாணம் செய்யப்பட்டது. மாலை, அங்குரஸ்தாபனம், மகா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை நடந்தது. நேற்று, காலை, 9:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், அனைத்து மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.காலை, 11:00 மணியளவில், மகா அபிஷேகம் நடந்தது. மாலை, தேவார இசை நிகழ்ச்சியும், தொடர்ந்து, சர்வ அலங்காரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா நடந்தது. கும்பாபிஷேக விழாவில், சிறுவானுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.