ஆற்றில் அழகர் இறங்குமிடத்தில் ரூ.90 லட்சம் செலவிடும் மாநகராட்சி
மதுரை;மதுரை வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் ஆண்டுதோறும் மாநகராட்சி 90 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக பாலம் அமைத்து வருகிறது. இங்கு நிரந்தர பாலம் அமைக்க நகராட்சி நிர்வாக ஆணையகம் உத்தரவிட்டும் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். சித்திரை திருவிழாவில் மதுரைக்கு வரும் அழகரை வரவேற்க மாநகராட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்கிறது. இதில் அழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரத்தில் தற்காலிக பாலம் அமைக்கப்படுகிறது.
இந்த ஆண்டும் 90 லட்சம் ரூபாயில் தற்காலிக பாலம் அமைக்கும் திட்டத்துடன் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். ஓராண்டிற்கு முன் நகராட்சி நிர்வாக ஆணைய கமிஷனர் பிரகாஷ், இந்த பகுதியை பார்வையிட்டு இதற்கு ஆகும் செலவினங்களை கட்டுப்படுத்த நிரந்தர பாலம் அமைக்க உத்தரவிட்டார். இதற்கு பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இரு துறையும் மாறி மாறி குறைக்கூறி திட்டத்தை செயல்படுத்தாமல் இழுத்தடிக்கின்றன. தண்ணீர் வந்தாலும், வராவிட்டாலும் மக்களின் வரிப்பணம் ஆண்டுதோறும் வீணாகாமல் இருக்க நிரந்தர பாலம் அவசியம் என்பதை மாநகராட்சி உணர வேண்டும்.