உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரம் தருவாய் வடிவேலா!

வரம் தருவாய் வடிவேலா!

●  உலகம் அனைத்தையும் ஆள்பவனே! நல்லவர்க்கு அருள்பவனே! வடிவேலனே!
குற்றம் பொறுக்கும் குணக்கடலே! சிவகுருநாதனே!  வேண்டும் வரம் தருபவனே! எட்டுத்திக்கையும் அருளாட்சி செய்பவனே! சரவணபவனே! என்னைக் காத்தருள் வாயாக.
●  கயிலைநாதர்பெற்ற தவக்கொழுந்தே! தேன் சிந்தும் கடப்பமாலையை விரும்பி
அணிபவனே! தணிகாசல மூர்த்தியே! கார்த்திகேயனே! சூரபத்மனை ஆட்கொண்ட வீரனே! தேவசேனாபதியே! வள்ளிக்கு வாய்த்தவனே! என் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக.
●  செவ்வேள் பரமனே! விநாயகருக்கு பின் வந்தவனே! சிவசுப்பிரமணியனே! ஒளிமிகுந்த தோள்களைக் கொண்டவனே! பன்னிருகை வேலவனே! வெற்றி வேலாயுத மூர்த்தியே!
●  திருமாலின் மருமகனே! குழந்தைக் கடவுளே! எனக்கு ஆரோக்கியத்தை தந்தருள் வாயாக.
●  மயில்வாகனனே! சேவற்கொடியோனே! சிவசக்தி மைந்தனே! நம்பியவரைக் காப்பவனே!
●  காங்கேயனே! அறுபடை வீடுகளில் அமர்ந்து அருளாட்சி புரிபவனே! தெய்வானை  
மணவாளனே! நவக்கிரகங்களால் உண்டாகும் தோஷங்களைப் போக்கி இன்பவாழ்வு
அருள்வாயாக.
●  சஷ்டிநாதனே! மண்ணிலும், மரத்திலும், மலையிலும், நெருப்பிலும், நீரிலும், வாகனத் தில் செல்லும்போதும், பாதாள குகையிலும், வேறெந்த இடத்திலும் நான் இருக்கும்போது விரும்பி வந்து காத்தருளவேண்டும். ஒருகணமும் உன்னை மறவாத பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
●  இனியமொழிபேசும்தெய்வா னையின் மன்னவனே! வள்ளிநாயகியின் கரம் பிடித்த வனே! கருணை சிந்தும் விழிகளைக் கொண்டவனே! உன்வெற்றிக் கொடியில் இருக்கும் சேவலைக் கூவச் செய்து என் வாழ்வில் நல்ல விடியலை உண்டாக்கு வாயாக.
●  தாமரைத் திருவடிகளைக் கொண்டவனே! வேதம் புகழும் சக்தியுமை பாலனே!
குறிஞ்சியின் முதல்வனே! துன்பம் எல்லாம் போக்கி அன்பர் வாழ்வில் ஆறுதலைத் தந்தருளும் ஆறுமுகப் பெருமானே! பிரணவத்திற்குப் பொருள் உரைத்த சிவகுருநாதனே! நீயே எனக்கு ஞானத்தை வழங்கி அருளவேண்டும்.
●  வேதத்தின் உட்பொருளே! மனதைக் கவரும் பேரழகனே! தெய்வசிகாமணியே! குன்றுதோறும் குடியிருக்கும் குமரேசனே! அமுதம் போல இனிமை கொண்டவனே! சரவணப் பொய்கையில் உதித்தவனே! அவ்வைக்கு அருள் செய்த சிவபாலனே! திருச்செந்தில் ஆண்டவனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !