பத்ரகாளியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்
ஈரோடு: கோட்டை பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, கோட்டை சின்னப்பாவடி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா நேற்று நடந்தது. காப்பு கட்டி விரதமிருந்த, ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர், அதிகாலை முதலே, நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோவில் தலைமை பூசாரி மணிகண்டன், முதலில் தீ மிதித்து, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள், முதியவர்கள் என, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி கோஷம் முழங்க, குண்டம் இறங்கினர். சிலர் குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர்.இதை தொடர்ந்து பொங்கல் வைபவம் நடந்தது. மாவிளக்கு ஊர்வலம், இரவில் அம்மன் திருவீதியுலா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மூலவர் ரோஜா இதழ் வண்ண பட்டுடுத்தி காட்சியளித்தார்.