வேண்டும் வரம் தரும் மூங்கிலணை காமாட்சி அம்மன்!
தேவதானப்பட்டி: திருமணத்தடை நீக்கம், குழந்தைப்பேறு என வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளிக்கிறார் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன். தேவதானப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் மஞ்சளாற்றின் கரையில் அமைந்துள்ளது. மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில். இங்கு மூலஸ்தானம் எனும் குச்சுவீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் வழங்கும் நெய் மூலமாக பகல், இரவு என 24 மணி நேரமும் அணையாவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடக்கும் சாயரட்சை பூஜையில் சயன உத்தரவு கேட்பது இக்கோயிலின் சிறப்பாகும்.
காமாட்சி அம்மனின் பக்தையும், ஆதிஜமின் தாரிணியும், பரம்பரை அறங்காவலர்களின் மூதாதையுமான காமக்காள் தனது மகனின் பிரிவால் வருந்தினார். அதற்காக அம்மன் உத்தரவுப்படி அந்த வாலிபரின் நினைவு தினமாகிய தை மாதம் ரதசப்தமி சுபதினத்தன்று பரம்பரை அறங்காவர்களால் ஆண்டு தோறும் சடங்கு செய்யப்பட்டு அதன் பிறகு மாசி மகாசிவராத்திரி திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இந்தாண்டு ஜன., 24ல் முகூர்த்தக்கால் நடப்பட்டு பிப். 13 முதல் பிப். 17 வரை திருவிழா நடக்கிறது. திருமண தடை நீக்கி, குழந்தைபாக்யம், வேலை வாய்ப்பு, தொழில் அபிவிருத்தி என பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் அம்மன் நிறைவேற்றுவதாக நம்பிக்கை உள்ளது. விரதம் இருக்கும் பக்தர்கள் திருவிழாவில் அக்னி சட்டி, காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். குழந்தை பாக்யம் பெற்றோர் கரும்பு தொட்டிலில் குழந்தையை கொண்டு வந்து அம்மனை வழிபடுவர். மேலும் விபரங்களுக்கு செயல் அலுவலர் சந்திரசேகரனை 94431 92101 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.