உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷம், மஹா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை கோவிலில் பிரதோஷம், மஹா சிவராத்திரி விழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி பிரதோஷ வழிபாட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கும், மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள், அதிகாலை, 5:00 மணி முதல் பகல், 12:00 மணிவரை, அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னதியில் பூக்களால் லட்சார்ச்சனை செய்தனர்.   

மாலை, 6:00 மணிக்கு பெரிய நந்திக்கு பிரதோஷ அபிேஷகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மஹா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு, 7:30 மணிக்கு, முதல் கால பூஜை, இரவு, 11:30 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, 14 அதிகாலை, 2:30 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காம் கால பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, சுவாமி கருவறைக்கு பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனை நடந்தது. மஹா சிவராத்திரியையொட்டி, கோவில் கலை அரங்கில், மாலை, 4:00 மணிக்கு கோவில் ஓதுவார் குழுவினரின் தேவாரப்பாடல், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மற்றும் வயலின் இசை நடந்தது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !