உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள்

பழநி கோயிலில் ஆக்கிரமிப்பு கடைகள்

பழநி: பழநி திருஆவினன்குடி கோயில் ‘காம்பவுண்ட்’ சுவரை சுற்றிலும் உள்ள நுாற்றுக் கணக்கான ஆக்கிரமிப்பு கடைகளால் தினமும் நெரிசல் ஏற்படுகிறது. முருகனின் மூன்றாம்படைவீடான  திருஆவினன்குடிகோயில் ‘காம்பவுண்ட்’, சரவணப்பொய்கை தீர்த்த கிணறு, மலைக்கோயிலுக்கு செல்லும் சன்னதிரோடு உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் ஏராளமாக உள்ளன.

இதனால்  நெரிசலில் சிக்கி பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இவ்விஷயத்தில் ‘கவனிப்பு’ காரணமாக போலீசார், அதிகாரிகள் நடவடிக்கை பெயரளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தை தொடர்ந்து கோயில் வளாக கடை, ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பழநி மலைக்கோயில்,  திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன்,  மாரியம்மன் உள்ளிட்ட கோயில் அருகே, இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சிலர் தங்கும்விடுதி, மண்டபங்கள் முன்பகுதி ரோட்டில்  கடை வைக்க வாடகைக்கு விடுகின்றனர். ஏற்கனவே தைப்பூசம் நாளில் திருஆவினன்குடி கோயில் அருகே காஸ் சிலிண்டர் கசிவால் தீப்பற்றி எரிந்தது.  நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர் ஜோதிக்குமார் கூறுகையில், ‘‘திருஆவினன்குடிகோயில், சன்னதிவீதி, சரவணப்பொய்கை பகுதிகளில் தைப்பூச நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதுபோல தற்போதுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !