கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)
கெஞ்சுங்க இந்த கடவுளை! கொஞ்சும் இந்த புத்தாண்டு (60/100)
தைரியத்துடன் சிரமங்களை எதிர்நோக்கும் கும்பராசி அன்பர்களே!
பிரதான கிரகங்களான குரு, சனி, ராகு-கேதுவின் அமர்வு அவ்வளவு நல்ல பலன்களைத் தரும் வகையில் இல்லை. அஷ்டமச்சனி விலகி விட்டாலும், ஒன்பதாம் இடத்தில் இருக்கும் அவரால் பட்ட சிரமம் குறையுமே தவிர பெரிய அளவிலான மாற்றம் இராது. ஏனெனில், குருவும் மே மாதத்தில் அர்த்தாஷ்டம குரு என்ற நிலையில் செல்கிறார். எனவே, குருவின் பார்வை இடங்களின் வழியாகவே நீங்கள் நற்பலன்களை பெற இயலும். எந்த செயலிலும் முன்யோசனை, தகுந்த திட்டமிடுதல் அவசியம்.
இளைய சகோதர, சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. வீடு, வாகனத்தில் நம்பகத்தன்மை இல்லாத எவருக்கும் இடம் தருவது கூடாது. அரசு தொடர்பான விஷயங்களில் மென்மையான போக்கை கடைபிடிப்பது அவசியம். உங்கள் ராசியின் அடிப்படையில், தாயின் உடல்நலன் பாதிக்கப்படலாம். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கொடுங்கள். புத்திரர்களின் பிடிவாதம் கண்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பொறுமையுடன் வழிநடத்துவது அவசியம். பூர்வ சொத்தில் வருமானம் குறையும். முக்கிய தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது கடன் பெறுவீர்கள். உடல்நலன் அதிருப்தியைத் தரும். ஒவ்வாத உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து குடும்ப சூழ்நிலையை சமாளிப்பர்.
தொழில் சார்ந்த வகையில் வரும் குளறுபடியை சரிசெய்வதால் மட்டுமே ஓரளவு வளர்ச்சி பெற முடியும். வருமானம் மிதமாகவே இருக்கும். வெளியூர் பயணத்தின்போது, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம். சிலருக்கு வீடு, பணியிட மாற்றம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. தெய்வ வழிபாடு கிரகங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றும்
தொழிலதிபர்கள்: மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல் ஏஜென்சி, டிபார்ட்மென்டல் ஸ்டோர், நிதி, கல்வி நிறுவனம், பால்பண்ணை, அரிசி ஆலை, அச்சகம் நடத்துவோர், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், மின்சார மின்னணு சாதனம், வாகன உதிரிபாகம், தோல், காகிதம், கட்டுமானப் பொருள் உற்பத்தி செய்பவர்கள் தொழிலில் நேரடி கவனத்துடன் ஈடுபடுவது அவசியம். லாபம் ஓரளவுக்கு இருக்கும். மற்ற தொழில் செய்பவர்களுக்கு இவர்களை விட லாபம் சற்று கூடும். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவதில் சிரமம் உண்டாகும். பொருள் உற்பத்தி, தரத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். புதிய மாற்றங்கள் தற்போதைக்கு வேண்டாம்.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, மளிகை, தோல், பிளாஸ்டிக், காய்கறி, பழம், மின்சார, மின்னணு சாதனங்கள், பால் பொருள், வாகனம், ஆட்டோமொபைல் உதிரி பாகம், கட்டுமானப் பொருள், அழகு சாதனம், ஸ்டேஷனரி, மருந்து, பாத்திர வியாபாரிகள் சந்தையில் போட்டியை எதிர்கொள்வர். இதனால் அதிக லாபம் எதிர் பார்க்க இயலாது. மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட பரவாயில்லை என்ற சூழல் இருக்கும். சரக்கு வாகன வகையில் ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் விஷயத்தில் இப்போதைய நிலை நீடிக்கும். புதிய சலுகைகள் பெற தாமதமாகும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனத்துடன் பின்பற்ற வேண்டும். சிலர் இடமாற்றத்தை எதிர்கொள்வர். குடும்பப் பெண்கள் கணவரின் மனமறிந்து செயல்படுவர். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, மிதமான விற்பனை, அதற்கேற்ப பணவரவு காண்பர். பண விஷயத்தில் யாருக்கும் பொறுப்பேற்பது கூடாது. இரவல் நகை வாங்குவது, கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள்: மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், கலை, அறிவியல், கம்ப்யூட்டர், ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், விவசாய மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் குறைய வாய்ப்புண்டு. கவனமாக படித்தால் கிரகங்களால் ஏதும் செய்ய இயலாது. மற்றவர்களுக்கு ஓரளவு மதிப்பெண் கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலை மாணவர்களுக்கும் இதே நிலை தான். வீண்பொழுது போக்கைக் குறைப்பது அவசியம். படிப்புக்கான வசதி ஓரளவே கிடைக்கும். ஆசிரியர், பெற்றோர் அறிவுரைகளை ஏற்பது எதிர்கால நலனுக்கு உகந்தது. வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு தாமதம் ஏற்படும்.
அரசியல்வாதிகள்: உங்களால் நன்மை பெற்றவர்கள் கூட, எதிர்தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்படுவர். தொண்டர்களின் ஆதரவைப் பெற பெரும்பணம் செலவாகும். தேசமயத்தில், சமூகப்பணியில் ஆர்வம் குறையாது. அரசு தொடர்பான விஷயத்தில் ஓரளவு அனுகூலம் உண்டு. புத்திரரின் விருப்பத்திற்கு மாறாக அரசியலில் ஈடுபடுத்துவது கூடாது.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான வசதிகளை பெறுவதில் தாமதம் இருக்கும். அளவான மகசூல், மிதமான லாபம் கிடைக்கும். நவீன உழவுக்கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றிபெறும். நிலப்பிரச்னையில் பொறுமையைக் கடைபிடிப்பது நன்மை தரும். பயிர் கடன் தள்ளுபடி போன்ற சலுகை பயன் கிடைக்கும்.
குருபெயர்ச்சி : ராசிக்கு 2,11 க்கு அதிபதியான குரு, மே 16 வரை மேஷத்தில் சஞ்சரிக்கிறார். பின் ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால், ஆண்டின் முற்பகுதியில் பணியிடத்தில் பிரச்னை, வாக்குவாதம், தடுமாற்றம் உண்டாகும். எந்தச்செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மே17 முதல் குருவின் 5,7,9 ஆகிய பார்வைகள் 8,10,12 ஆகிய இடங்களில் விழுகின்றன. ஆண்டின் பிற்பகுதியில் குருவால் ஓரளவு நற்பலன் உண்டாகும். பணியில் இருந்த சிரமம் குறையும். பணவரவு அதிகமாகும். வெளிநாட்டுப் பயணம் செல்வதில் இருந்த தடையனைத்தும் விலகும். பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப ஆதாயம் கூடும். அதிகாரிகளிடம் நற்பெயர் கிடைக்கும்.
ராகுகேது பெயர்ச்சி : ராசிக்கு பத்தாம் வீடான விருச்சிகத்தில் ராகு இருப்பதால், முயற்சிகளில் தடை ஏற்படும். செயல் நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும். சிலர் உறவினர்களால் புறக்கணிக்கப்படுவர். புகழுக்கு களங்கம் தரும் விஷயங்களைத் தவிர்ப்பது அவசியம். மே 17ல் ரிஷப குருவால், ராகுவால் ஏற்படும் பிரச்னைகள் பெருமளவில் குறையும். ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 2) ராகு ஒன்பதாம் வீடான துலாமிற்குச் செல்கிறார். கேது ராசிக்கு நாலாம் வீட்டில் அனுகூலமற்று இருக்கிறார். இதனால், தீயவர்களின் நட்பை புறக்கணிப்பது மிக அவசியம். உடல்நலனில் அக்கறை மிக தேவை. உஷ்ண சம்பந்தமான பிரச்னைகள் தலைதூக்கும். நெருப்பு, மின்சாரம் சார்ந்து பணியாற்றுபவர்கள் விழிப்போடு இருப்பது நல்லது. குருவின் ரிஷப மாறுதலால், கேதுவின் கெடுபலன் குறையும். ஆண்டின் இறுதியில் கேது, அனுகூலம் தரும் விதத்தில் ராசிக்கு மூன்றாம் இடமான மேஷத்திற்குப் பெயர்ச்சியாகிறார்.
பரிகாரம் : காளிதேவியை வழிபடுவதால் தொழிலில் சிரமம் நீங்குவதோடு பொருளாதாரமும் சீர்பெறும்.
பரிகாரப் பாடல்
பொருளே பொருள் முடிக்கும் போகமே
அரும்போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே
எம்மனத்து வஞ்சத்து
இருள் ஏதுமின்றி ஒளி
வெளியாகிஇருக்கும் உன்றன்
அருள் ஏது அறிகின்றிலேன்
அம்புயாதனத்து அம்பிகையே!