உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான கோவில்களை புதுப்பிக்க மதிப்பீடு தயாரிப்பு

பழமையான கோவில்களை புதுப்பிக்க மதிப்பீடு தயாரிப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில், பிரசித்தி பெற்ற பழமையான கோவில்களை புதுப்பித்து, வழிபாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில், அறநிலையத் துறை ஈடுபட்டுள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்தில், பழமையான கோவில்கள் ஏராளமானவை உள்ளன. இவற்றில் பல, அறநிலையத் துறையினர் கட்டுப்பாட்டில் இருப்பவை.

கடந்த ஆண்டுகளில், முறையான பராமரிப்பு இல்லாமல், பிரசித்தி பெற்ற சில கோவில்கள் சீரழிவதாக, நமது நாளிதழில் அவ்வப்போது செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சிறப்பு வாய்ந்த கோவில்களின் தற்போதைய நிலை குறித்து, மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள், சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, சில கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, அறநிலையத் துறையினர் தீர்மானித்து உள்ளனர். அதன்படி, சாலவாக்கத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், அழிசூர் அகிலாண்டீஸ்வரர் கோவில், காட்டாங்குளம் அகத்தீஸ்வரர் கோவில், பெருங்கோழி திருக்குமாரீஸ்வரர் கோவில், கடம்பர்கோவில் கிராமத்தில் உள்ள கடம்பநாதர் கோவில்களை புதுப்பிக்க, நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து, உத்திரமேரூர் ஒன்றிய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அறநிலையத் துறைக்கு சொந்தமான முக்கிய கோவில்கள் குறித்து, மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், முதற்கட்டமாக சில கோவில்களில், புனரமைப்பு பணி நடக்கவுள்ளது. திருப்பணி செய்ய மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், அரசு நிதிக்கு விண்ணப்பித்து, அனுமதி பெற்று பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !