உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் பன்னிரு திருமுறை திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பன்னிரு திருமுறை திருவிழா

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், பன்னிரு திருமுறை திருவிழா (பிப்.25) துவங்கியது. சிதம்பரம் சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்கள், அப்சல்யூட் மேஜிக் என்டர்டைமண்ட் மற்றும் வேத ஆகம தெய்வ தமிழ் இசை மன்றம் சார்பில் தில்லையில் அகிலம் போற்றும் பன்னிரு திருமுறை திருவிழா, நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் (பிப்.25) காலை துவங்கியது. இவ்விழா, தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. துவக்க விழாவிற்கு சபாநாயகர் கோவில் செயலர் ராஜகணபதி தீட்சிதர் தலைமை தாங்கினார். உமாநாத தீட்சிதர் ஆசியுரை வழங்கினார். காலை 8:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்கியது. 9:00 மணிக்கு முனைவர் ஞானப்பூங்கோதை முதல் திருமுறை என்ற தலைப்பிலும், 10:00 மணிக்கு முனைவர் அகர முதல்வன் 2ம் திருமுறை என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். தொடர்ந்து, குடந்தை லட்சுமணன் ஓதுவாரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாலையில், முனைவர் இளையஞானி 3ம் திருமுறை, முனைவர் இந்திரா சவுந்திரராஜன் 4ம் திருமுறை ஆகிய தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். பழனி வெங்கடேச ஓதுவாரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஆனந்தநடராஜ தீட்சிதர், வெங்கடேச தீட்சிதர், சினிமா இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ராஜீவி கார்த்திக், சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !