ரயில் மார்க்கமாக பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள்: தமிழக டிராவல்ஸ் நிறுவனங்கள் வருவாய் இழப்பு
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையால், அய்யப்ப பக்தர்கள் ரயில் மார்க்கமாக சபரிமலைக்கு செல்வதால், தமிழக வேன், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சபரிமலையில் ஜனவரி மாத மகரஜோதி தரிசனம் முடியும் வரை, தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். தேனி, குமுளி வழியாக தனியார் வேன், ஆம்னி பஸ்கள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து, பம்பைக்கு செல்வர். இந்தாண்டு, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால், கம்பம், குமுளி வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக சென்ற அய்யப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் சென்ற வாகனங்களும் கேரளாவில் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியது.
தற்போதுள்ள, சூழ்நிலையில், குமுளி மற்றும் செங்கோட்டை சாலை மார்க்கமாக கேரளாவிற்கு செல்வது பாதுகாப்பானதல்ல என, அய்யப்ப பக்தர்கள் கருத துவங்கியுள்ளனர். இதனால், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, ரயில் மார்க்கமாக அங்கு செல்வதையே அய்யப்ப பக்தர்கள் விரும்புகின்றனர். சமீபகாலமாக, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களில் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் பயணிப்பதே, இதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இதனால், தமிழகத்தை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனங்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு, அய்யப்ப பக்தர்களால் ஆண்டுதோறும் கிடைத்து வந்த வருவாய் இந்த ஆண்டு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர், கிளீனர்களும் வருவாயை இழந்துள்ளனர். வாகனங்களின் பாதுகாப்பு கருதி, பல நிறுவனங்கள் கேரளாவிற்கு டிராவல்ஸ் வாகனங்களை இயக்குவதையும் நிறுத்தி வைத்துள்ளன.
இது குறித்து, சென்னையை சேர்ந்த ஆம்னி பஸ் உரிமையாளர் நாகராஜன் கூறியதாவது: சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்வதற்கு ஆம்னி பஸ்கள், டிராவல்ஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு, அதிகபட்சமாக, 9,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். மாவட்டத்திற்கு மாவட்டம் வாகன வாடகை வேறுபடும். ஒரு டிராவல்ஸ் வாகனத்திற்கு இந்த சீசனில் அதிகபட்சம், 10 சவாரியாவது கிடைக்கும். ஆனால், முல்லைப் பெரியாறு பிரச்னையால், இந்த ஆண்டு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. புத்தாண்டிற்குள் நிலைமை சீரானால், மகரஜோதி முடிவதற்குள், இரண்டு சவாரியாவது கிடைக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் அதற்கு, வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.