பழநி கோயில் நிலச்சரிவு சீரமைப்பில் அரைகுறை பணிகளால் அச்சம்
பழநி : பழநி கோயிலில் நிலச்சரிவால் பாதிப்படைந்த படிப்பாதை சீரமைப்பு பணிகள், இரண்டு மாதங்களாகியும் முழுமை பெறவில்லை. பக்தர் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், இவை இடையூறாக உள்ளன. பழநி மலைக்கோயிலுக்கு படிப்பாதை உள்ளபோதும், இலகுவான யானைப்பாதை வழித்தடத்தையே, பெரும்பாலான பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். பிற நாட்களைவிட, "சீசன் நேரங்களில் யானைப்பாதை வழியே நடந்து செல்வதையே விரும்புவர்.
இந்நிலையில், அக்.,16 ல், பெய்த மழையில், வள்ளி சுனை அருகே 56வது மண்டப பகுதியில், யானைப்பாதை சேதமடைந்தது. சிமென்ட் தளப் பாதை, பக்கவாட்டு மண் அரிக்கப்பட்டதால், இரண்டு நாட்களுக்கு இவ்வழி, பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தளம் சீரமைக்கப்பட்டு, பக்கவாட்டில் மணல் மூடைகளை அடுக்கி கம்பி தடுப்புகள் அமைத்தனர். பின்னர், இவ்வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு மாதங்களாகியும், இப்பகுதியில் சீரமைப்பு முழுமை பெறவில்லை. மணல் மூடைகள் மீது தார்பாய் மூடியுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், இவற்றால் பெரும் இடையூறு ஏற்படும். தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரிக்கும் முன், இப்பணியை முழுமைப்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள்: பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். வேண்டுதல் நிறைவேற்ற வரும் பக்தர்கள், வேதனையோடு செல்வதை தவிர்க்க வேண்டியது, கோயில் நிர்வாகத்தின் முழுப் பொறுப்பு.