உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

பாலக்கோடு: பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா, ஆண்டுதோறும் மாசி மாதம் விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த கோவில் வெள்ளிவிழா ஆண்டு திருவிழா, கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கியது. முக்கிய விழாவான, அம்மன் கொலு வைத்தல், கடந்த, 26ல் நடந்தது. 27ல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று, கோவிலுக்கு உட்பட்ட பல கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து, பூ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று எருது ஆட்டம், கரகாட்டம், நாளை அம்மன் வீடு திரும்புதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர். இந்த திருவிழாவில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !