சபரிமலையில் திடீர் ஸ்டிரைக் 160 ஊழியர்கள் டிஸ்மிஸ்
சபரிமலை:சபரிமலை அரவணை பிரசாதம் தயாரிப்பு நிலையத்தில், தற்காலிக தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நடத்தி வரும் போராட்டத்தால், பிரசாதம் தயாரிப்பு பணி முடங்கியது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, 160 தற்காலிக தொழிலாளர்களை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பணி நீக்கம் செய்துள்ளது.
கேரளா பத்தனம்திட்டா மாவட்டம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், அரவணை பிரசாத தயாரிப்பு நிலையம் உள்ளது. இங்கு தற்காலிக தொழிலாளர்களாக 250 பேர் பணியாற்றி வந்தனர். தங்களுக்கு வழங்கப்படும் தினக்கூலியை 250ல் இருந்து 300 ரூபாயாக உயர்த்தக் கோரி, 27ம் தேதி மதியம் முதல் இத்தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
இதனால், அரவணை பிரசாத தயாரிப்பு பணிகள் முடங்கின. இந்நிலையில், இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 160 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், பிரசாத தயாரிப்பு நிலையத்தில் தேவஸ்வம் ஊழியர்களே நியமிக்கப்பட்டு, அவர்கள் பிரசாதம் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.