உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள்

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபட்ட பெண்கள்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள, பெண்களின் சபரிமலையான, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பல்லாயிரக் கணக்கான பெண்கள், பொங்கலிட்டு வழிபட்டனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

சிலப்பதிகார நாயகியான கண்ணகி, மதுரையை எரித்த பின், கேரளாவின், கொடுங்களூர் செல்லும் வழியில், திருவனந்தபுரம் அருகில், கிள்ளியாற்றின் கரையில் தங்கினார். அன்று இரவு, அப்பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவரின் கனவில் வந்து, தனக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என, கேட்டுக் கொண்டதற்கு இணங்க, கிள்ளியாற்றின் கரையில் கோவில் கட்டப்பட்டது.பிரசித்தி பெற்ற, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், மாசி மாதத்தில், 10 நாட்கள் விரதமிருக்கும் பெண்கள், பவுர்ணமியும், பூரம் நட்சத்திரமும் இணைந்து வரும், 10வது நாளில், கோவிலின் முன் பொங்கலிட்டு வழிபடுகின்றனர். பெண்கள் மட்டுமே பங்கேற்கும், பொங்கலா என்றழைக்கப்படும், இந்த விழாவில், ஆண்களுக்கு அனுமதி இல்லை. கடந்த, 2009ல், 25 லட்சம் பெண்கள் ஒன்றுகூடி பொங்கலிட்டு வழிபட்டது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.இந்தாண்டு, பவுர்ண மியும், பூரம் நட்சத்திரமும் இணைந்து வந்ததையடுத்து, நேற்று காலை, கோவில் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த, பல்லாயிரக்கணக்கான பெண்கள் கூடினர். செங்கல் அடுப்பு வைத்து, மண்பானை அல்லது புதுப் பானையுடன் காத்திருந்தனர். கோவிலுக்கு முன் வைக்கப்பட்ட, பண்டார அடுப்பு எனப்படும் அடுப்பில், காலை, கோவில் மேல்சாந்தி வாமனன் நம்பூதிரி தீ வளர்த்ததும், பெண்கள் பொங்கலிட்டு, அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்தனர்.இந்த பொங்கல் விழாவில், கேரள கவர்னரின் மனைவி, சரஸ்வதி, பிரபல கவிஞர், சுகுதகுமாரி மற்றும் தடகள வீராங்கனை, பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவுக்காக, திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு, உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து சிறப்பு பஸ்களும், ரயில்களும் இயக்கப்பட்டன.தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த, பெண் போலீசார் உட்பட, 4,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !