உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா நேற்று கோலாகல துவக்கம்

சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்ப திருவிழா நேற்று கோலாகல துவக்கம்

கும்பகோணம்: நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவிலில் முக்கோடி தெப்பத்திருவிழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள் திருக்கோவில் உள்ளது. திருநரையூர் என்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் பெற்ற இத்தலத்தில் மணிமுக்தா நதி தீர்த்தில் மாதவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற, அவருக்கு குமாரத்தியாய் அவதரித்த வஞ்சுவவல்லியை மானிட உருவத்தில் வந்து திருக்கல்யாணம் புரிந்து அத்திருக்கோலத்தோடு இத்தலத்தில் காட்சியளிக்கிறார். இதையொட்டி இன்று வரை இத்தலத்தில் சீனிவாசபெருமாளுக்கும், வஞ்சுளவல்லி தாயாருக்கும் பிரமோத்சவ தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி இவ்வாண்டும் நேற்று 29ம்தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா துவங்கியது. முன்னதாக பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு படிச்சட்டத்தில் எழுந்தருளினர். நிர்வாக அதிகாரி பொன்னழகு முன்னிலையில் திரளான பக்தர்கள் திரண்டிருக்க கொடியேற்றம் நடந்தது. விழாவில் முக்கிய சிறப்பம்சமாக உலகப்பிரசித்திபெற்ற கல்கருடசேவை நிகழ்ச்சி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி இரவு ஏழு மணிக்கு நடக்கிறது. மூலவராகவும், உற்சவராகவும் உள்ள கல்கருடபகவானை முதலில் நான்கு, எட்டு, பதினாறு, முப்பத்திரண்டு, அறுபத்திநான்கு என தோளில் சுமந்து வாகனமண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சி பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் நிகழ்ச்சி அதி விமரிசையாக நடைபெறும். தினசரி காலை பல்லக்கிலும், மாலை சூரியபிரபை, யாளி,கிளி, சேஷ,அனுமார், கமல, யானை,குதிரை, தங்கதண்டிகை என பல்வேறு வாகனங்கள் பெருமாள் தாயார் வீதியுலா நடக்கிறது. விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வாக ஜனவரி ஆறாம் தேதி காலை ஆறு மணிக்கு கோரதத்தில் பெருமாள், தாயார் வீதியுலாவும், தீர்த்தவாரியும் நடக்கிறது. மாலை ஆறு மணிக்கு தெப்ப உற்சவம் கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் இராமச்சந்திரன், ஆலய நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !