பவானி அம்மன் கோவிலுக்கு செல்பவருக்கு வனத்துறை நிபந்தனைகள் அறிவிப்பு
ஊட்டி : அவலாஞ்சி பகுதியில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு செல்பவர்கள் ஆடல், பாடல்களை நடத்தவும், சமையல் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சிக்கு அருகேயுள்ள லக்கடி பகுதியில் அமைந்துள்ள பவானி அம்மன் கோவிலுக்கு புத்தாண்டு நாளில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். வரும் 1ம் தேதி அங்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையின் சார்பில் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வனக்கோட்ட வன அலுவலர் அனுராக் மிஸ்ரா கூறியதாவது; பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வனம், வன உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழக்கும் எந்த வித தீங்கும் ஏற்படாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். அப்பகுதியில் தீ மூட்டி சமையல் செய்ய கூடாது; பக்தர்களின் நோக்கம் சாமி தரிசனம் செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும். மேலும், வனப்பகுதிக்குள் மது அருந்துவது, புகை பிடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடங்களில் போட கூடாது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வன உயிரினங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், பக்தர்கள் ஆடல், பாடல்களுடன் வன உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல்,மாலை 4 மணி வரை மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தரிசனம் முடிந்தவுடன் வனப்பகுதிக்குள் தங்காமல் உடனடியாக திரும்ப வேண்டும். வனத்துறையினர் நிபந்தனைகளை மீறினால் அல்லது விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அனுராக் மிஸ்ரா கூறினார்.