உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு

திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவம், பந்தம் பறி உற்சவத்துடன், நேற்று நிறைவுற்றது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மாசி பிரம்மோற்சவம், பிப்., 20ல், கொடிஏற்றத்துடன் துவங்கியது.இதில், சந்திரசேகரர், சந்திர மற்றும் சூரிய பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, யானை, புஷ்ப பல்லக்கு, குதிரை மற்றும் இந்திர விமானங்களில், ஆறு நாட்கள் எழுந்தருளிய உற்சவர், மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம், பிப்., 26லும்; திருக்கல்யாணம், 28 காலையும்; மாலை, மகிழடி சேவையும் நடைபெற்றது. நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமி பந்தம் பறி மற்றும், 18 திருநடன நிகழ்வு நடைபெற்றது.

ஊடல் உற்சவம்: அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய தியாகராஜ சுவாமி, மாட வீதிகளை வலம் வந்து, கோவிலுக்குள் சென்றார்.மங்கள வாத்தியங்கள் முழங்க, வசந்த தீர்த்த குளத்தை சுற்றிய தியாகராஜர் மற்றும் வடிவுடையம்மனின், ஊடல் உற்சவம் நடைபெற்றது.பின், வடிவுடையம்மன்கருவறையின் முன்பிருந்து, தெற்கு நோக்கி காட்சியளிப்பது போல், தியாகராஜர், வடக்கு நோக்கி ஒன்பது முறை திருநடனம் புரிந்தார். இதற்காக, நேற்று முன்தினம் இரவே, ஏராளமாக பக்தர்கள், கோவில் வளாகத்தில் காத்திருந்து, திருநடனத்தை கண்டு ரசித்தனர். இந்நிகழ்வுடன், மாசி பிரம்மோற்சவம் நிறைவுற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !