சுசீந்திரம் கோயில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நாகர்கோவில்: சுசீந்திரம் கோயிலில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். சிவன், பிரம்மா, விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருள்பாலித்து வருகின்றனர். இங்கு மார்கழி திருவிழா பிரசித்தி பெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் சுவாமி பவனி வருதலும், மக்கள்மார் சந்திப்பு, பஞ்சமூர்த்தி தரிசனம். கருடன் வலம் வரும் காட்சி, ரிஷப வாகன தரிசனம், கைலாசபர்வத தரிசனம், நடராஜ மூர்த்தி தரிசனம். சப்தாவர்ணம், ஆருத்ரா தரிசனம் போன்றவை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகும்.
முதல் நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரியும், மேல்சாந்தியும் கெட்டி மேளம் முழங்க கொடியேற்றி திபராதனை நடத்தினர். ஒன்பதாம் நாள் விழாவான ஜன.,7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு நடைபெறும் சப்தாவர்ண நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஜன., 8ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.