உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரிய கோவில் கேமராக்கள் இருப்பது 31: இயங்குவது ஒன்று

தஞ்சை பெரிய கோவில் கேமராக்கள் இருப்பது 31: இயங்குவது ஒன்று

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில் உள்ள, 31 கண்காணிப்பு கேமராக்களில், 30 செயல்படாமல் இருப்பதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது. யுனெஸ்கோ நிறுவனம், தஞ்சை பெரிய கோவிலை, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. கோவிலுக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இதனால், 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர்.

கூடுதல் பாதுகாப்பு கருதி, 2014ல், 1.30 கோடி ரூபாய் மதிப்பில், 31 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட, 10 கேமராக்கள் மூலம், 1,000 மீட்டர் சுற்றளவில், எந்தவொரு நிகழ்வையும் துல்லியமாக படம் பிடித்து, பதிவு செய்ய முடியும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, சந்தேகப்படும்படியான நபரின், அனைத்து நடவடிக்கைகளையும் பிரத்யேகமாக பதிவு செய்யும் வகையில், கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கேமராக்களை கண்காணிக்க, சூழற்சி முறையில், போலீசார் நியமிக்கப்பட்டனர். ஒரே ஆண்டுக்கும் மேலாக, இந்த கேமராக்கள் செயல்படாமல், காட்சி பொருளாக உள்ளன. ஒரு கேமரா மட்டுமே செயல்படுகிறது. கேமராக்களை இணைக்கும் ஒயர்கள் அறுந்து கிடப்பதால், பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இது குறித்து, தொழில் துறை முதல்நிலை பராமரிப்பு உதவியாளர், சந்திரசேகரன் கூறியதாவது: கோவிலில் உள்ள, 31 கேமராக்களில், 1 மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இது குறித்து, மேலிடத்திற்கு தெரிவித்துள்ளோம். 900 மீட்டர் நீளத்திற்கு புதிய ஒயர்களை மாற்ற வேண்டும். விரைவில், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !