உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

வீரபாண்டி கோயிலில் தீத்தடுப்பு விழிப்புணர்வு

தேனி:சமீபத்தில் மதுரை மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயிலில், தீப்பற்றியதில் கடைகள் எரிந்து சேதமானதோடு, கோயில் மண்டபமும் சேதமடைந்தது. இதனை தொடர்ந்து கோயில்களில் சூடம், நெய் விளக்கு, எண்ணெய் ஊற்றுதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தேனியில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டன. தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி, பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், உத்தமபாளையம் ஞான அய்யப்பன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஆண்டிபட்டி சாஸ்தா கோயில் செயல் அலுவலர் அருள்செல்வன் மற்றும் மாவட்டத்தில் உள்ள கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோயில்களில் தீப்பற்றுவதை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வீரபாண்டி கோயில் வளாகத்தில் உள்ள மாவிளக்கு மண்டபம், அன்னதான மண்டபம், தேர் நிறுத்தம், செயல் அலுவலர் அலுவலகம், கழிப்பறைகளில் உள்ளிட்டவைகள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !