உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டா இல்லாத பட்டீஸ்வரர் கோவில்: ஆக்கிரமிப்பில் 202 ஏக்கர் நிலம்

பட்டா இல்லாத பட்டீஸ்வரர் கோவில்: ஆக்கிரமிப்பில் 202 ஏக்கர் நிலம்

பேரூர்;பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, கோவிலின் மேற்கு, தெற்கு மற்றும் புட்டுவிக்கி, குனியமுத்துார், மாவுத்தம்பதி உள்ளிட்ட பகுதிகளில், இனாம் பூமிகள் தவிர்த்து, 14 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கச்சியப்ப முனிவர் எழுதிய பேரூர் புராண புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பரந்து கிடந்த கோவில் நிலங்கள், நாளடைவில், பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில், கோவில் நிலங்களை குத்தகை பார்த்தவர்கள், பட்டா போட்டு சொந்தமாக்கியுள்ளனர். பலர், ’சைட்’ பிரித்து விற்பனையும் செய்துவிட்டனர்.

இதனால், கோவிலுக்கு சொந்தமாக தற்போது, 366.66 ஏக்கர் நிலங்கள் மட்டுமே உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. இதிலும், 77.23 ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே குத்தகை வருகிறது; 202 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. நிலங்கள் முறையாக பராமரிக்காததால், ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கிறது. இக்கோவில் சொத்துக்கள் குறித்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் நிலங்களை மீட்கவும், குத்தகையை முறையாக வசூலிக்கவும், ஐகோர்ட் உத்திரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு, கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இனியாவது அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோருக்கு பட்டா வழங்கப்பட்டு வரும் நிலையில், கோவையின் பெருமையாக வீற்றிருக்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு பட்டா கூட இல்லாதது, சிவ பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது.

பேரூர் கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ”ஐகோர்ட் உத்தரவுப்படி, 366.66 ஏக்கர் நிலங்களும் அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளது. இதில், 202 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. வருவாய் பெருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குத்தகையை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; ஆக்கிரமிப்பு நிலங்கள், விரைவில் மீட்கப்படும்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !