உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவ நூல்கள் நல்வழியை போதிக்கின்றன

சைவ நூல்கள் நல்வழியை போதிக்கின்றன

சென்னை: ”சைவ நுால்கள், வாழ்க்கைக்கான நல்வழியை போதிக்கின்றன,” என, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் கூறினார்.ஐந்தாவது, அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, சென்னை, அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவா கல்லுாரியில், நேற்று துவங்கியது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டை, கவர்னர், பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்து பேசியதாவது:மக்களின் வாழ்க்கைக்கான நல்வழியை, திருமுறைகள், மெய்கண்டார் சாஸ்திரம் உள்ளிட்ட, சைவ சமய நுால்கள் வகுத்துள்ளன. அக்கருத்துக்களை மக்களிடம் பரப்புவதில், நாயன்மார்கள் பாடுபட்டனர். அவற்றைப் பற்றி ஆராய, இந்த மாநாடு உதவும். இதில், பல வெளிநாட்டு அறிஞர்கள் பங்கேற்றுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழகம், சைவ சமயத்தை போற்றி வளர்த்துள்ளது. நான் இங்கு வந்த, ஐந்து மாதங்களில், சிதம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள, புகழ்பெற்ற கோவில்களை பார்வையிட்டு உள்ளேன். தேவார நால்வர், தமிழகத்தில் பெரும்பணி ஆற்றி உள்ளதை அறிந்தேன்.நவீன காலத்தில், ஆன்மிக சிந்தனைகளை, ராமகிருஷ்ணரும், அவரின் சீடரான, விவேகானந்தரும் மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அவர்களின் பணியை, சகோதரி நிவேதிதை தொடர்ந்தார். பாரதிக்கு, பெண் விடுதலை குறித்தும், பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்தும், அவர் தான் விளக்கினார்.இவ்வாறு அவர் பேசினார்.மாநாட்டுக்கு தலைமையேற்ற, தருமை ஆதீனம், சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியர் பேசியதாவது:நம் நாடும், பண்பாடும், மிகப் பழமையானவை. நாம் தான், அனைத்து துறைகளிலும், உலகில் முன்னணியில் இருக்க வேண்டும். நம் நாடு, ஞானத்துக்கு பஞ்சமில்லாத நாடு. நாம், பெண்களை போற்ற வேண்டும். மென்மையான பெண்களை, ஆண்கள் பாதுகாக்க வேண்டும். சைவ சமயத்தில், ஆணை பகலாகவும், பெண்ணை இரவாகவும் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்கள், சூரியன்; பெண்கள், நிலவு.ஆண்டை பிரிப்பதிலும், அவ்வாறு தான் பிரித்துள்ளனர். தை மாதம் முதல், ஆனி மாதம் வரை, ஆண் மாதங்கள். அதாவது, உத்தராயணம்; வெப்பம் மிகுந்தவை. அதனால், சிவனுக்கான பண்டிகைகள் நடக்கும். ஆடி மாதம் முதல், மார்கழி வரை, தட்சிணாயணம்; பெண்களுக்கான மாதங்கள். அப்போது, அம்மனுக்கான விழாக்கள் நடக்கின்றன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !