வேளாங்கண்ணியில் புத்தாண்டு "கோலாகலம்
நாகப்பட்டினம்:வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், புத்தாண்டையொட்டி நடந்த, நள்ளிரவு கூட்டு பாடல் திருப்பலியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.நாகை அடுத்த, வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், ஆண்டுதோறும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்படும். தேவாலயம் சார்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 2011ம் ஆண்டை நன்றியுடன் வழியனுப்பும் விதமாக, பங்கு பாதிரியார் ஆரோக்கியதாஸ் தலைமையில் மறையுரை, இரவு 11 மணிக்கு துவங்கியது.
இரவு 11.45 மணிக்கு, 2012ம் ஆண்டை வரவேற்க, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் துவங்கிய, 30 பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு பாடல் திருப்பலி நள்ளிரவு, 1.15 மணி வரை நடந்தது.நிகழ்ச்சியில் பங்கேற்க, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், கூட்டு பாடல் திருப்பலியில் கலந்து கொண்டனர்.தேவாலய மேல் மற்றும் கீழ் கோவில்களில், தமிழ், ஆங்கிலம்,தெலுங்கு, இந்தி, கொங்கணி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடந்த, புத்தாண்டு சிறப்பு திருப்பலிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.