ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தேர் மராமத்து துவக்கம்
ராமேஸ்வரம், 150 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் திருத்தேர் சேதமடைந்ததால், புதிய மரகட்டைகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 11ம் நுாற்றாண்டில் உருவான ராமேஸ்வரம் திருக்கோயிலில் 17 ம் நுாற்றாண்டில் கிழக்கு ராஜகோபுரம், உலக புகழ் பெற்ற மூன்றாம் பிரகாரம் கட்டினர். இக்கோயில் முக்கிய விழாவான மாசி திருவிழாவில் 40 அடி உயரமுள்ள 150 ஆண்டுகள் பழமையான இத்தேரில், சுவாமி தேரின் சிம்மாசனம் பகுதி கடந்த சில நாள்களுக்கு முன்பு சேதம் அடைந்தது. இதனை அகற்றி, புதிய மரத்தில் தேரை மராமத்து செய்ய அறநிலைதுறை ஆணையர் உத்தரவிட்டார். இதனையடுத்து கோயில் நிர்வாகம் ரூபாய் 4.50 லட்சம் செலவில் சுவாமி தேரில் மராமத்து செய்ய, மதுரை சேர்ந்த ஸ்தபதிகள் புதிய வேங்கை மரத்தில் தேரில் சிம்மாசனம் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். ஓரிரு தினங்களில் இப்பணி முடிந்ததும், சுவாமி திருத்தேர் புதுபொலிவுடன் காட்சியளிக்கும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.