உருவாட்டி அம்மன் கோயிலில் பொங்கல் விழா துவக்கம்
காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே உள்ள உருவாட்டி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா பிரச்னை குறித்து இருதரப்பு சமாதானக்கூட்டத்தில் புதிய முடிவு எடுக்கப்பட்டது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பங்குனி திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடந்தது அப்போது இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.
அதன்பின் திருவிழாவில் பங்கேற்காமல் ஒதுங்கி விட்ட ஒரு தரப்பினர் தங்களுக்கும் மண்டகப்படி நடத்த அனுமதி வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திருவிழாவில் ஒரு நாள் அவர்களையும் மண்டகப்படி நடத்த அனுமதிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இருதரப்பினர் பங்கேற்ற சமாதான கூட்டம் தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன் மற்றும் திருவேகம்பத்துார் எஸ்.ஐ., உட்பட பலர் பங்கேற்றனர். அதில், ஆகம விதிப்படி 10 நாள் மட்டுமே திருவிழா நடத்த வேண்டும். தனி மண்டகப்படி கேட்டவர்கள் தரப்பில் 3 பேர் அனைத்து தரப்பினருடன் இணைந்து வரிவசூல் செய்து 7 ம் நாள் மண்டகப்படியை தேவஸ்தானம், வருவாய், போலீஸ் துறையுடன் இணைந்து நடத்துவது எனவும், அவ்வாறு திருவிழா நடைபெறாவிட்டால், உயர்நீதி மன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது. வரும் மார்ச் 29 ல் காலை 5:00 மணிக்கு அம்மன் தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன், மேலாளர் இளங்கோ மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.