சேரங்கோட்டை சுவாமி மலையில் பூஜை!
பந்தலூர் : பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி சேரங்கோட்டை சுவாமி மலையில் சிறப்பு பூஜை நடந்தது. மழவன் சேரம்பாடி பகுதியில் சேரங்கோட்டை சுவாமி மலை அமைந்துள்ளது. இங்குள்ள கிருஷ்ணா நந்தாகிரி ஆசிரமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியன்று சிறப்பு பூஜைகள் பஜனை, அன்னதானம் நடத்துவது வழக்கம். சுமார் 300 அடி உயரத்தில் அமைந்துள்ள மலை உச்சியில் உள்ள பாறையில் சுரக்கும் நீர் தீர்த்தமாகவும் வழங்கப்படுகிறது. வனப்பகுதியாக உள்ள இங்கு புத்தாண்டு தினத்தில் வன விலங்குகள் நடமாட்டம் இருக்காது. புத்தாண்டு நாளில் இங்கு நடந்த சிறப்பு பூஜையில் பந்தலூர் தாலுகாவை சேர்ந்த 12 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகள் ஓம்காரநந்தா சுவாமி தலைமையில் நடந்தது. அன்னதானத்தை கூடலூர் எம்.எல்.ஏ., திராவிடமணி துவக்கி வைத்தார். சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராம், வார்டு உறுப்பினர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.