உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ராஜகோபுர சிற்பம் : ஜெர்மன் அதிபர் மனைவி ஆச்சரியம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ராஜகோபுர சிற்பம் : ஜெர்மன் அதிபர் மனைவி ஆச்சரியம்

சென்னை: கபாலீஸ்வரர் கோவில் வந்த, ஜெர்மன் நாட்டு அதிபரின் மனைவி, சுவாமி தரிசனம் செய்தார். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா நடந்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், ஏராளமானோர், இவ்விழாவில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மன் அதிபரின் மனைவி, எல்கே புடென்பென்டர், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தார். கபாலீஸ்வரர் கோவில் இணை ஆணையர் காவேரி, அவரை வரவேற்று, கோவில் உட்பிரகாரங்களை, சுற்றி காட்டினார். கோவில் தலபுராணம், அவருக்கு ஜெர்மன் மொழி பெயர்த்து கூறப்பட்டது.

இது குறித்து, இணை ஆணையர், காவேரி கூறிய தாவது: சிவபெருமான் குறித்த, பல்வேறு தகவல்களை, எல்கே புடென்பென்டர் கேட்டறிந்தார். பின், முருகன் மற்றும் விநாயகர் குறித்து, சில கேள்விகளை கேட்டார்; அனைத்திற்கும் நாங்கள், விளக்கம் அளித்தோம். கோவில் ராஜகோபுரத்தை சுற்றி காட்டிய போது, இந்த கோவில் குறித்து, நீங்கள் சொன்ன அனைத்து தகவல்களுமே, கோபுரத்தில் சிற்பங்களாக இடம் பெற்றிருக்கும் அல்லவா என, வியந்து பாராட்டினார். தமிழக கலாசாரம், கோவில், பக்தி குறித்த தகவல்களை, சிறிது நேரம் பேசினார். கோவிலுக்கு வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தது, மிகுந்த பரவசத்தையும், மன நிறைவையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக, அவர் குறிப்பிட்டு சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !