பரமக்குடியில் ராமர் - சீதை திருக்கல்யாணம் கோலாகலம்
பரமக்குடி : பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி, ராமர்-சீதை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் ஜெய் சீதாராம் கோஷம் முழங்கசுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் ராமநவமி விழாவையொட்டி, மார்ச் 17 ல் காலை 10:30 மணிக்கு கொடிமரத்தில் கருட கொடியேற்றப்பட்டது. தினமும் இரவு 7:00 மணிக்கு ராமர் வாமன, காளிங்கநர்த்தன, பாண்டுரெங்க, கூடலழகர், கள்ளழகர், தவழும் கண்ணன் ஆகிய அலங்காரத்தில் குதிரை, கருட, அனுமன், சேஷ வாகனங்களில் வீதியுலா வந்தார். மார்ச் 24ல் மாலை 6:00 மணிக்கு குழந்தைப் பேறு வேண்டி, புத்திரகாமேஷ்டியாகம் நடத்தப்பட்டது. மறுநாள் ராமஜனனம், நேற்று காலை 10:51 மணிக்கு ராமர் சங்கர மடத்தில் இருந்து புறப்பாடாகி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலமும், பின்னர் 12:15 மணிக்கு கோதண்டராமசாமிக்கும் - சீதாதேவிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. அங்கு கூடியிருந்த பெண்கள் தாலிக்கயிறுகளை புதுப்பித்து கட்டிக்கொண்டனர். பக்தர்கள் ஜெய்சீதாராம் கோஷம் முழங்க பிரார்த்தனை செய்தனர். இரவு பெருமாள் தாயாருடன் பட்டணப்பிரவேசம் வந்தார். இன்று காலை தீர்த்தவாரியும், இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும். நாளை காலை 10:00 மணிக்கு ஆஞ்சநேயர் அபிேஷகம், இரவு வீதியுலா நடைபெறும்.