பங்குனி உத்திர தேர்த்திருவிழா; கொடியேற்றத்துடன் துவக்கம்
அன்னுார்:குமாரபாளையத்தில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று துவங்கியது. குமாரபாளையத்தில், பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், 100 ஆண்டுகளுக்கு மேலாக வற்றாத சுனை உள்ளது. இங்கு 10ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. 28ம் தேதி காலையில், யாகசாலை பூஜையும், மாலையில் சுவாமி உட்பிரகார உலா வருதலும் நடக்கிறது. 29ம் தேதி காலையில் யாகசாலை பூஜையும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் சுவாமி உலா வருதலும் நடக்கிறது. 30ம் தேதி காலை, 8:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 10:00 மணிக்கு, தேரோட்டம் துவங்குகிறது. ஜமாப், செண்டை மேள இசையுடன் நிகழ்ச்சி நடக்கிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளையபட்டம், மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர அடிகள் பங்கேற்கின்றனர்.