உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் சிறப்பு ஏற்பாடு!

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக, ஏற்கனவே தேவஸ்தான தகவல் மைய அலுவலகங்கள் மூலம், முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருமலை கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசியன்றும், 6ம் தேதி துவாதசியன்றும் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வைகுண்ட ஏகாதசியன்று,அதிகாலை திருப்பாவை சேவைக்குப்பின், தொடங்கும் சொர்க்க வாசல் தரிசனம், மறுநாள் துவாதசியன்று நள்ளிரவு வரை நீடிக்கும். கடந்த ஆண்டுகளில் வைகுண்ட ஏகாதசியன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விட்டதால் போதுமான வசதிகள் செய்து தருவதில், தேவஸ்தான நிர்வாகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது. பக்தர்கள் அவதிப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு இந்தாண்டு, தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

திவ்யதரிசனம்: சொர்க்கவாசல் தரிசனத்திற்காக, திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, புதிய ஏற்பாட்டின்படி, 100 ரூபாய்க்கு "திவ்ய தரிசனம் என்ற பெயரில் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் 30 ஆயிரம் வரையும் தேவஸ்தான தகவல் மையங்கள் மூலம், விற்பனை செய்யப்பட்டது.

தனி கவுன்டர்கள்: இதில், 100 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள், திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக வர வேண்டும் என்ற நிபந்தனை அமல்படுத்தப்பட்டுள்ளது. 100 ரூபாய் திவ்ய தரிசன டிக்கெட்டுகளை வாங்கியவர்கள், சிறப்பு முத்திரையிட்டு கொள்வதற்காக, தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அலிபிரி வழியில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, 16 கூடுதல் கவுன்டர்களும், ஸ்ரீவாரிமெட்டு வழியாக வருபவர்களின் வசதிக்காக 8 கூடுதல் கவுன்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முகத்துவாரம் வழியாக: பாத யாத்திரையாக வருவதற்கு முன்னேற்பாடாக, 100 ரூபாய் திவ்ய தரிசன டிக்கெட் பெற்றுள்ள பக்தர்கள், திருமலை வந்ததும், இலவச அன்னதானம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வளாகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு முன் பகுதியில் இருந்து சுவாமி தரிசனம் செல்வதற்கான "கியூ தொடங்குகிறது. திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலின் தலப்புராண வரலாற்றின்படி, தெப்பக்குளத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள வராக சுவாமி கோவில் தெப்பக் குளத்தையும் தரிசித்தபடி மாடவீதி வழியாக, கோவில் முன்பு காலியாக உள்ள வளாகம் வழியாக சென்று, கோவிலின் முகத்துவாரம் (பிரதான வாயிற்படி) வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல "க்யூ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தங்கும் வசதி: பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சுவாமி தரிசன டோக்கன் பெற்றுக் கொள்பவர்களுக்கு, திருமலையில் நாராயணகிரி உத்யாவனம் பகுதியில் தங்க இடவசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தரிசனம் செய்வதற்கு கோகுலம் வளையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து வரிசை தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசி, துவாதசி 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு முன்னேற்பாடாக டிக்கெட் வாங்கிய பக்தர்கள் திருமலையில் லேபாக்ஷி எம்போரியம் அருகில் இருந்து, சுவாமி தரிசனத்திற்கு செல்ல சிறப்பு நுழைவு "க்யூ தொடங்குகிறது.

50 ரூபாய் டிக்கெட் ரத்து: வைகுண்ட ஏகாதசிக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாளையும், நாளை மறுநாளும் 50 ரூபாய் சுதர்சன தரிசன கட்டண சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தினங்களிலும் பக்தர்களின் வசதிக்காக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் சுவாமி தரிசனத்திற்கு செல்லும் அனைத்து "க்யூக்களிலும் வழக்கம் போல் குடிநீர், உணவு பாக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்ன பிரசாத வளாகத்திலும் தொடர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்ரமணியம், துணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !