ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: இன்று மோகினி அலங்கார உற்சவம்!
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான மோகினி அலங்கார உற்சவம் இன்றும் (4ம் தேதி), பரமபதவாசல் திறப்புவிழா நாளையும் (5ம் தேதி) நடக்கிறது. உலக பிரசித்திப்பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், பெரிய கோவில் என்று சிறப்பித்து அழைக்கப்படும் ரங்கநாதர் கோவிலில் நடக்கும் அனைத்து உற்சவங்களும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும் அத்யயன உற்சவம் (வைகுண்ட ஏகாதசி - பகல்பத்துதிருமொழி, ராப்பத்து திருவாய்மொழித்திருநாட்கள்) முக்கிய திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பகல் பத்து, இராப்பத்து, இயற்பா என்று 21 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் பகல்பத்தின் போது, நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், இராப்பத்து நாட்களில் திருமாமணி மண்டபத்திலும் (ஆயிரங்கால் மண்டபம்) அனைத்து ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் எழுந்தருளி ஸேவை சாதிப்பார். இந்தாண்டு, கடந்த 26ம் தேதி, பகல்பத்து விழா துவங்கியது. பகல்பத்தின்போது, மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் விதவிதமான அலங்காரத்துடன், தினந்தோறும் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஸேவை சாதிக்கிறார்.
நிறைவுநாளான இன்று (4ம் தேதி) நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் ஸேவை சாதிக்கிறார். அழகே பெண் உருவாய் வந்ததைபோன்று, முன்னழகு, பின்னழகோடு நம்பெருமாள் காட்சி தருவது கண்கொள்ளா அற்புதக்காட்சியாகும். இதையொட்டி, இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து மோகினி அலங்காரத்துடன் புறப்பட்டு, 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார். காலை 7 - 7.30 மணி வரை திரையிடப்படுகிறது. காலை 7.30 மணி முதல் 11 மணி வரை அரையர் சேவை (பொதுஜன ஸேவையுடன்) நடக்கிறது. 11 - 11.30 மணி வரை அலங்காரம் அமுது செய்யதிரையும், 11.30 - மதியம் 2.30 மணி வரை அரையர் 2வது சேவை, ராவணவதம் (பொதுஜன ஸேவையுடன்) நடக்கிறது.
மதியம் 2.30- 3 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்ய திரையும், 3 - 4 மணி வரை உபயக்காரர் மரியாதை (பொதுஜன ஸேவையுடன்), மாலை 4- 4.30 மணி வரை பொதுஜன ஸேவையும் நடக்கிறது. மாலை 4.30 - 5 மணி வரை புறப்பாட்டுக்குத் திரையிடப்படுகிறது. 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு, 5.30 மணிக்கு ஆரியபட்டாளர் வாசலை சென்றடைகிறார். இரவு 7 மணிக்கு திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம்வந்து கருடமண்டபம் சேர்கிறார். 8.30 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி, கருடமண்டபத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9 மணிக்கு மூலஸ்தானத்தை அடைகிறார். பரமபதவாசல் திறப்பு: ராப்பத்து உற்சவத்தின் முதல் திருநாளான நாளை (5ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு, சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்புவிழா நடக்கிறது. இரவு 10 மணி வரை பரமபதவாசல் திறந்திருக்கும். மூலவர் முத்தங்கி ஸேவை, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர்கள் ஜெயராமன், தனபால் செய்து வருகின்றனர்.