164 ஆண்டுகள் பழமையான சிங்கப்பூர் கோயிலில் கும்பாபிஷேகம்
சிங்கப்பூர்: ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள, 164 ஆண்டுகள் பழமையான கோயில், 20 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படுகிறது. அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில். தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள, 164 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலில், புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்தியாவில் இருந்து சென்றுள்ள, 20 பேர் அடங்கிய குழு, உள்ளூர் மக்களுடன் இணைந்து, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.ஹிந்து கோவில் ஆகம விதிகளின்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதன்படி, 1979, 1992 மற்றும் 2005ல், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.தற்போது, கோவிலின் பழமை மாறாமல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பக்தர்களுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும் வகையில் விரிவாக்கப் பணிகளும் நடக்கின்றன. தினசரி நடக்கும் பூஜைகளுக்கு இடையூறு இல்லாமல், இந்தப் பணிகள் நடந்து வருவதாக, கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.பராமரிப்பு பணிகள் முடிந்து, ஏப்., 22ல், கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.