காஞ்சி வரதராஜப்பெருமாள் மூன்று மாலைகளுடன் காட்சி
காஞ்சிபுரம்: வரதராஜப்பெருமாள் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, மூன்று மாலைகளுடன் வரதர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா, 24ல் துவங்கியது. தினமும் மாலையில் பெருமாள் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஆஞ்சனேயர் சன்னதி வரை சென்று வருகிறார். வழக்கமாக, வரதராஜப் பெருமாள், ஒரு மாலையுடன் தான் காட்சியளிப்பார். மற்ற உற்சவத்திலும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் நான்காம் நாளான நேற்று, சுவாமி புறப்பாடு அன்று பெருமாள் மூன்று மாலைகளுடன் காட்சியளித்தார். நேற்று மாலை, 6:15 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு, ஆஞ்சனேயர் சன்னதி வரை சென்று திரும்பி, 100 கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஊஞ்சல் சேவை மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு, 8:30 மணிக்கு கண்ணாடி அறைக்கு சென்றார்.