பேரூர் பட்டீஸ்வரர் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2793 days ago
பேரூர்: கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. மேலைச்சிதம்பரம் என்று போற்றப்படும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சுவாமி, வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். நேற்று காலை, 8.30 மணிக்கு, பட்டாடை, அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகள், தனித்தனி தேரில் எழுந்தருளினர். முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி மாலை, 4:30 மணிக்கு நடந்தது. சிறுவாணி ரோடு, ரத வீதிகள் வழியாக சென்ற தேர்கள், நிலையை அடைந்தன. வரும், 30ல் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.