உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பங்குனி உத்திரத்தால் களை கட்டிய கொடுமுடி காவிரி: 150 ரேக்ளா வண்டிகளில் வந்த பக்தர்கள்

பங்குனி உத்திரத்தால் களை கட்டிய கொடுமுடி காவிரி: 150 ரேக்ளா வண்டிகளில் வந்த பக்தர்கள்

கொடுமுடி: பங்குனி உத்திரத்துக்கு, பழநி செல்லும் பக்தர்கள், தீர்த்தம் எடுக்க குவிவதால், கொடுமுடி களை கட்டியுள்ளது. பழநி பங்குனி உத்திர திருவிழாவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. பழநிக்கு தீர்த்தக்காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள், அதிக அளவில் வருவதால், கொடுமுடி களை கட்டியுள்ளது. கார், வேன், பஸ், லாரி, டிராக்டர் மட்டுமின்றி ரேக்ளா வண்டி, மாட்டு வண்டி மற்றும் பாதயாத்திரையாகவும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த சில நாட்களாக, கொடுமுடிக்கு வருகின்றனர். காவிரி ஆற்றில், தீர்த்தம் எடுத்துக்கொண்டு, பழநி செல்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரன் பட்டி, கலையமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர், குதிரை, நாட்டு மாடுகளை பூட்டிய ரேக்ளா வண்டிகளில், பழநிக்கு தீர்த்தம் எடுத்துச் செல்ல நேற்று வந்தனர். ரேக்ளா வண்டிகள் அணிவகுத்து சென்றதை பார்த்து, கொடுமுடி பகுதி மக்கள் வியந்தனர்.ரேக்ளா வண்டியில் வந்த பக்தர் தேவராஜ் கூறியதாவது: முன்னோர் வழியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள், ரேக்ளா வண்டிகளில் கொடுமுடி வந்து, பழநிக்கு தீர்த்தக்காவடி எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. நாங்கள் கடந்த, 24ல் எங்கள் ஊரில் புறப்பட்டோம். பழநிக்கு ரேக்ளா வண்டிகளில் செல்வதற்காகவே, வீடுகள் தோறும் நாட்டு மாடுகள், ரேக்ளா வண்டி வைத்து பராமரிக்கிறோம். பங்குனி உத்திரத்தன்று பழநிக்கு சென்று, முருகனை தரிசனம் செய்து விட்டு, அன்னதானம் முடித்த பின், சொந்த ஊருக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !