கும்பகோணம் அருகே கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரமோற்சவ தேரோட்டம்
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கொட்டையூர் கோடீஸ்வரசுவாமி திருக்கோவிலில் 32 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த பங்குனி பிரமோற்சவ தேரோட்டம் நடந்தது.
மகாமக சிறப்பு கொண்ட 12 சிவாலயங்களில் ஒன்றான கொட்டையூர் பந்தாடுநாயகி சமேத கோடீஸ்வரசுவாமி திருக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது, திருநாவுக்கரசால் தேவார பாடல் பதிகம் பெற்ற தலம். காவிரி வற்றாமல் கரைபுரண்டு ஓடவும் ஒவ்வொரு ஆண்டும் ஆத்ரேய மகரிஷிக்கு, ஆடி 18ம் நாள் ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இத்தகைய பெருமை பெற்ற இக்கோவிலில் கடந்த 32 ஆண்டுகளாக, பங்குனி பிரமோற்சவ பெருவிழா நடைபெறாமல் இருந்தன.
இது குறித்து பல்வேறு ஆன்மீக அமைப்புகள் கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து விழாவி னை நடத்த, அறநிலையத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் போராட்டங்கள் நடத்தியும், விழாவினை நடத்த நன்கொடையாளர்கள் இருந்த போதும் அதனை கண்டு கொள்ளவில்லை, போராட்டங்களின் விளைவாக, 32 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 21ம் தேதி கொடியேற்றம்வெகு சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து காலை,மாலை பல்வேறு வாகனத்தில் வீதிஉலாவும், கடந்த 27ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிழ்வான (29ம் தேதி) காலை, பந்தாடு நாயகி அம்பாளும், கோடீஸ்வரரும் சிறப்பு அலங்காரத்தில் தேரின் முன்பு எழுந்தருளினர். அதன்பிறகு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் செய்யப்பட்டன. 32 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் எனபதால்,பக்தர்கள் உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதிவழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.