நாளை சொர்க்க வாசல் திறப்பு: கோட்டையில் பணிகள் துரிதம்!
ஈரோடு:ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி நாளில், பெருமாள் கோவில்களில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு மேல், இரவு 10 மணி வரை, கோவிலில் பெருமாள் மோகினி அலங்கார காட்சி நடக்கிறது. நாளை அதிகாலை 3க்கு கஸ்தூரி அரங்கநாதருக்கு திருமஞ்சனமும், தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதிகாலை 4.30க்கு சொர்க்க வாசல் திறப்பும், ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இதற்காக, கோவிலில் சொர்க்க வாசல் திறப்புக்கான முன்னேற்பாடு தீவிரமாக நடந்தது. பக்தர்கள் வரிசையில் நிற்க தடுப்பு கம்பு அமைக்கும் பணி, கோவிலை சுத்தப்படுத்துதல், வண்ண விளக்குகளால் கோவிலை அலங்கரித்தல் உள்ளிட்ட பல பணிகள் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ரவி செய்து வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகனம், செருப்பு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.