திருப்பூரில் கோவில் நிலத்தில் கட்டுமானம்:அறிவிப்பு வைத்து எச்சரிக்கை
திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம், திருவேங்கடம் நகர் பகுதியில், நல்லூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான, பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.
இதில், சர்வே எண், 165ல் உள்ள, 9.24 ஏக்கர் நிலத்தை பலர் ஆக்கிரமித்து, 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இது குறித்து, நீதிமன்ற தடை உத்தரவு உள்ளது. அதனை மீறி, பலர் வீடுகள், கம்பெனிகள் என கட்டுமான பணி மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணியை தடுத்து நிறுத்தவும், அறிவிப்பு பலகை வைக்க செல்லும் அதிகாரிகள் மிரட்டப்படும் சம்பவங்களும் நடந்து வந்தன.
இது குறித்து அறநிலையத்துறை சார்பில், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால், கோவில் நிலங்களில் புதிய கட்டுமானங்கள், விற்பனை பரிவர்த் தனைக்கு தடை விதித்தும், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவும், கோவில் நிலம் முழுவதும் அறிவிப்பு பலகை வைக்கவும், கோர்ட் உத்தரவிட்டது.
இதனையடுத்து, அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஹர்சினி தலைமையிலான அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன், கோவில் நிலங்கள், புதிதாக கட்டுமான பணி நடந்து வரும் பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு முன், நேற்று எச்சரிக்கை பலகை வைத்தனர்.
அதில், இது கோவில் நிலம். ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. எந்தவிதமான கட்டுமான பணி வில்லங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டால், கோர்ட் அவமதிப்பு மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும், என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.