கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம்
காளையார்கோவில்: கொல்லங்குடி கோயிலில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காளையார்கோவில் அருகே கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி சுவாதி பெருவிழா கடந்த மார்ச் 23ல் துவங்கியது.
கடந்த மார்ச் 24ல் காப்பு கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு காளியம்மன், அய்யனாருக்கு சிறப்பு திருமஞ்சணம் நடந்தது. பின்னர் பெரிய தேரில் உற்சவ அம்மன் எழுந்தருளினார். அதற்கு முன்பாக சிறிய சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளினார். காலை 9:00 மணியளவில் ஏராளமான பக்தர் ஓம் சக்தி என்ற கோஷங்கள் முழங்க தேரின் வடத்தை இழுத்து வந்தனர். தேர் காலை 10:00 மணிக்கு நிலையை அடைந்தது. 10 ம் நாளான இன்று (ஏப்.,2) காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் தீர்த்தவாரியும், இரவு 12:00 மணிக்கு மின் அலங்காரத்துடன் மலர் பல்லக்கும் நடைபெறுகிறது. நாளை காலை 10:30 முதல் மதியம் 12:00 மணிக்குள் வெள்ளி ஊஞ்சல் உறசவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.