உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில் வண்டிச்சோறு பீமசேனன்

திரவுபதியம்மன் கோவில் திருவிழாவில் வண்டிச்சோறு பீமசேனன்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நேற்று, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பகாசூரனுக்காக, வண்டியில் கும்பம் எடுத்து சென்ற பீமசேனன், வழியில் அமர்ந்து அந்த கும்பத்தை புசித்து விட்டார். காலி வண்டியுடன் வந்த பீமசேனனை கண்டு கடும் சினம் கொண்ட பகாசூரன், பீமசேனனுடன் சண்டைக்கு வந்தான். ஆக்ரோஷமாக நடந்த சண்டையில், பீமசேனன், பகாசூரனை அழித்து வெற்றி கொண்டார். மகாபாரதத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வு நேற்று ஆர்.கே.பேட்டையில் நடந்தது. இரவு, 7:00 மணியளவில், வண்டியில் வீதியுலா வந்த பீமசேனனுக்கு, வீடுதோறும் பக்தர்கள் கும்பம் படைத்தனர். பீமன் எப்படியும் அந்த வண்டிச்சோற்றை சாப்பிட போகிறார் என்ற கதையை அறிந்திருந்த சிறுவர்கள், ஆரவாரமாக அந்த நிகழ்வை காண, உடன் வலம் வந்தனர். வாயில் கொழுக்கட்டையும், கையில் கதாயுதத்துடன் வலம் வந்த பீமசேனன், ஒரே நாள் இரவில், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் ஹீரோ ஆகிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !