சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி
மானாமதுரை: மானாமதுரையில் சித்திரை திருவிழாவிற்காக வைகை ஆறு சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மானாமதுரையில் வருடந்தோறும் ஆனந்தவல்லி-சோமநாதர், வீர அழகர் ஆகிய கோயில்களில் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும். வைகை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்த கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும் போது வைகை ஆற்றுக்குள் தான் தினந்தோறும் கலைநிகழ்ச்சி நடைபெறும்.மேலும் ராட்டினங்கள், சர்க்கஸ், மற்றும் ஏராளமான கடைகள் தற்காலிமாக வைகை ஆற்றுக்குள் அமைக்கப்படும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ’நிலாச்சோறு’அன்று மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் தங்களது வீடுகளில் சமைக்கப்பட்ட உணவுகளை வைகை ஆற்றுக்குள் கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிடுவது சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இந்நிலையில் திருவிழா விற்காக பேரூராட்சி சார்பில் சுத்தப்படுத்த டெண்டர் விடப்பட்டு மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் கைகை ஆற்றுக்குள் வளர்ந்திருந்த சீமைகருவேல மரங்கள், செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர்.