பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள் : மூன்று மாதத்தில் மதிப்பீடு பணி!
புதுடில்லி: "பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டு வரும் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, மூன்று மாதங்களில் துவங்கி, ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என, சுப்ரீம் கோர்ட் நியமித்த ஐவர் குழுவின் புதிய ஒருங்கிணைப்பாளர் வேலாயுதன் நாயர் தெரிவித்தார். கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய சுப்ரீம் கோர்ட் புதிய ஒருங்கிணைப்பாளராக தேசிய அருங்காட்சியக மைய தலைவர் வேலாயுதன் நாயரை நியமித்துள்ளது.
மதிப்பீடு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.வேலாயுதன் நாயர் கூறியதாவது: பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை, மதிப்பீடு செய்யும் பணி, இன்னும் மூன்று மாதங்களில் துவங்கும். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மூன்று மாதத்திற்குள் முடிக்கப்படும். பொக்கிஷங்கள் மதிப்பீடு பணி துவங்கினால், ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வதற்கு வசதியாக தேவைப்படும் உபகரணங்கள், ஒரு மாதத்திற்குள் பெறப்படும். மதிப்பீடு குழு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் முடங்கியிருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி துவங்கவே, முன்னர் திட்டமிடப்பட்டது. ஆனால், பணி நடக்கவில்லை. பொக்கிஷங்கள் எக்காலத்திலும் சேதமடையாத வகையில், உலகில் தலைசிறந்த அருங்காட்சியகங்களைப் போல், பாதுகாக்க உலக தரம் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். அதற்காக உலக அருங்காட்சியக கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றுவோம். அதை செயல்படுத்த கடுமையாக முயற்சிப்போம். இவ்வாறு வேலாயுதன் நாயர் தெரிவித்தார்.