நித்ய பெருமாள் கோவிலில் 22ல் புதிய கொடிமரம் நடவு
திருவிடந்தை: நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், வரும், 22ல் புதிய கொடி மரம் நடப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. மேலும், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவிலாக விளங்கும் இக்கோவிலில், ஆதிவராக பெருமாள் மூலவர், அகிலவல்லி தாயாருடன், நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் வீற்றுள்ளனர். கோவிலில், 2006ல் நடந்த கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் நடத்தப்பட உள்ளது. பாரம்பரிய கோவிலான இதை, தொல்லியல் துறையும் நிர்வகிக்கிறது. இந்நிலையில், மஹா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில், புனரமைப்பு பணிகளை, அத்துறை மேற்கொண்டுஉள்ளது. இதற்கிடையே, அறநிலையத் துறை நிர்வாகம், புதிய கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, நன்கொடையாளர் மூலம், தேக்கில், 50 அடி உயர கொடிமரத்தை, கடந்த மாதம் பெற்றது. ஆகம விதிகளின்படி, வரும், 22ல், கொடிமரம் நட கருதி, அத்துறையிடம் அனுமதி கோரியது. தற்போது அனுமதி பெறப்பட்டுள்ளது. அன்று காலை, 9:00 - 10:30 மணிக்குள் கொடி மரம் நடப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.