பார்வதிதேவி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அருகே, பார்வதி தேவி திட்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ளது, பார்வதி தேவி திட்டி அம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. பக்தர்கள் பங்களிப்புடன், சீரமைப்பு பணிகள் நடந்தன. திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, கணபதி பூஜை நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடங்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின், காலை, 9:45 மணிக்கு, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.