உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனசை பத்திரமா பாத்துக்கங்க...

மனசை பத்திரமா பாத்துக்கங்க...

சமையலறையில் “சாலட்” தயாரித்துக் கொண்டிருந்தாள் ஒரு தாய். மீதமான காய்கறி கழிவுகளை ஒதுக்கி வைத்திருந்தார். அப்போது வந்த அவரது மகள், “அம்மா! என் பிரண்ட் பர்த்டே பார்ட்டிக்காக கிளப்புக்கு கூப்பிடறாம்மா. நான் போயிட்டு வரட்டுமா...?” எனக் கேட்டாள். “பார்ட்டி” என்ற பெயரில் இக்காலத்தில் பிள்ளைகள்  விளையாட்டுத் தனமாக கெடுவதை உணர்ந்த அம்மாவின் கண்களில் கண்டிப்பும், முகத்தில் வெறுப்பும்  வெளிப்படுத்தியது. ஆனாலும், மகள் விடுவதாயில்லை. “அம்மா! நீங்க நினைக்கறது சரிதான். ஆனா, என் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போறோம். அதனால எந்த பயமும் இல்லை. நான் கட்டாயம் வருவேன்னு சொல்லிட்டேன், ப்ளீஸ் மா. போகாட்டி நல்லா இருக்காது” என்றாள். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தாய், சட்டென ஒதுக்கி வைத்திருந்த கழிவுகளை அள்ளி சாலட்டில் போட்டார். மகள் கொதித்தாள்.  “அம்மா! உங்களுக்கு என்ன பைத்தியமா? குப்பையை அள்ளி சாலட்ல போடுறீங்க? அது கெட்டு போயிடாதா?” என்றாள்.

“ஏன் அதனால என்ன? கெட்டுப் போனா போகட்டும்” என்றாள் அம்மா. மகள் புரிந்து கொள்ள முடியாமல் திகைத்தாள். “உன்னோட மனம் குப்பையான சிந்தனையை ஏற்க தயாராயிருக்கும் போது, வயிறும் குப்பையான உணவை ஏற்றுக்கொள்ளும்னு நினைச்சேன்” என்றார் தாய். மகளுக்கு புரிந்தது. தோழிகளிடம் “நான் வரவில்லை” என்று சொல்லி விட்டாள். தவறான பாதையில் உலகம் போகிறதென்றால் நாமும் போக  வேண்டும் என்ற கட்டாயமில்லை. மீறிச் சென்றால், ஆண்டவரிடத்தில் இருந்து அவை நம்மைப் பிரித்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை”  என்கிறது பைபிள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !