மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம் 50 ஆயிரம் பிரசாத பைகள் ரெடி
மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஏப்., 27) நடக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையொட்டி 50 ஆயிரம் பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாத பை வழங்கப்படுகிறது.
திருக்கல்யாணம் முடிந்ததும் காலை 9:30 மணி முதல் மேற்கு, வடக்கு, தெற்கு கோபுர நுழைவு வாயில்களில் தாலிக்கயிறு, மஞ்சள் கிழங்கு, தாழம்பூ குங்குமம், ஜவ்வாது விபூதி, பிஸ்கட் பாக்கெட், 500 மில்லி கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில் அடங்கிய பிரசாத பைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மேற்கு ஆடி வீதி குங்குமம் தயாரிக்கும் கட்டடம், பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கோயில் பக்தர்கள் பேரவையினர் பேக்கிங் பணியில் ஈடுபட்டனர். கோயில் சார்பில் ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில் மொய் காணிக்கை செலுத்த கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே அன்னதானக் கூடத்தில் திருக்கல்யாண விருந்து நடக்கிறது. டோக்கன் பெற்றவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வடக்கு வெளி வீதி சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் இன்று காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை திருக்கல்யாண விருந்து நடக்கிறது. நாளை (ஏப்., 28) காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.