நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவில், அ.தி.மு.க., - எம்.பி.க்கள் ஆகம விதிகளை மீறியதால் சர்ச்சை எழுந்தது.திருநெல்வேலி, காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக, நவம்பர் 30ல் பாலாலயம் மேற்கொள்ளப்பட்டது.உள்பிரகாரம், வெளி பிரகாரங்கள், சுவாமி, அம்பாள் கோபுரங்கள், விமானங்கள் உள்ளிட்ட திருப்பணிகள், 4.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. 24ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை, 7:00 மணிக்கு யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க புனித நீர் கோபுரம், விமானங்கள், மூலவர்சன்னதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.காலை, 9:50 மணிக்கு நெல்லையப்பர், வேணுவனநாதர், காந்திமதி அம்பாள் மற்றும் ராஜகோபுரம், விமானங்கள், பிரதான மூர்த்திகள், சமஸ்த வேதமூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
சங்கரன்கோவில் கோவில் தேரோட்டத்தில் பங்கேற்றுவிட்டு அமைச்சர்கள் ராஜு, ராமச்சந்திரன், ராஜலட்சுமி ஆகியோர் கும்பாபிஷேகம் முடியும் போது கோவிலுக்கு வந்தனர்.தருமபுரம் ஆதினம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் முத்துக்குமார சுவாமி தம்பிரான், திருவாவடுதுறை அம்பலவாண தேசிக சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், வேளக்குறிச்சி ஆதினம் சத்திய ஞான மகாதேவ சுவாமிகள், ராமகிருஷ்ண தபோவன தலைவர் சுவாமி சுத்தானந்தா, உள்ளிட்ட பல்வேறு மடாதிபதிகள், ஆதினகர்த்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தின் போது கோபுரங்கள், விமானங்கள் அருகில் காப்பு கட்டிய சிவாச்சாரியார்கள் மட்டுமே செல்வது ஆகமவிதியாகும்.ஆனால், விதிகளை மீறி, அ.தி.மு.க., பிரமுகர்கள் மற்றும் எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் மூலவர் விமானத்தின் மீது ஏறி அமர்ந்தனர்.பெண், எம்.பி.,க்கள் விஜிலா, வசந்தி ஆகியோரும் மேலே சென்றனர். பெண்கள், சுவாமி விமானத்தின் மீது ஏறக்கூடாது எனக்கூறி, ஆதினங்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர். இதனால், பெண், எம்.பி.க்கள் இறங்கினர். திருவாவடுதுறை இளைய சன்னிதானம், விமான பகுதிக்கு ஏறிச்சென்று, புனிதநீர் ஊற்றும் இடத்தில் நீங்கள் உட்கார்ந்து ஆகம விதிக்கு புறம்பாக செயல்படாதீர்கள், இறங்குங்கள்,என்றார்.அதற்குள் மணி, 9:50 ஆகிவிட்டதால், கலெக்டர், சந்தீப் நந்துாரி பச்சைக்கொடி காட்ட, ஒரே நேரத்தில் ஐந்து கோபுரங்கள், 50 விமானங்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது.