தி.மலையில் சித்ரா பவுர்ணமி திருவிழா : கற்பூரம் ஏற்றவும், மலையேறவும் தடை!
வேலூர்: திருவண்ணாமலையில் நாளை சித்ரா பவுர்ணமி திருவிழா நடக்கிறது. அப்போது, கோவிலில் கற்பூரம் ஏற்றவும், மலையேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம்அறிவித்துள்ளது. தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில், சித்ரா பவுர்ணமியை யொட்டி, திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும்.
நாளை சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கு இப்போது பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.கோவிலுக்குள் முதியோர்களை அழைத்துச் செல்ல, மூன்று பேட்டரி கார்களும், மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்ல சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது தரிசன பாதையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுகின்றனர்.பக்தர்களின் பொருட்களை இலவசமாக வைத்துவிட்டுச் செல்ல, இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவத்துக் கழகம் சார்பில், 2,800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றவும், மலை ஏறவும் தடை செய்யப்பட்டுள்ளது.விவசாய நிலங்களில், 42 இடங்களில், பம்புசெட்டுகளில் இலவசமாக குளிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளை, பக்தர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதை மீறி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிவல நேரம் ; நாளை காலை, 7:00 மணிக்கு பவுர்ணமி தொடங்கி, நாளை மறுநாள் காலை, 6:54 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள், தி.மலையில் கிரிவலம் வரலாம் என்று, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.