உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி விழா பால்குடம், சுவாமி வீதியுலா கோலாகலம்

சித்ரா பவுர்ணமி விழா பால்குடம், சுவாமி வீதியுலா கோலாகலம்

சித்ரா பவுர்ணமி விழா:  ஒட்டி, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில், பால் குடம் எடுத்தல், வீதியுலா உட்பட, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர். ஊத்துக்கோட்டை, ரெட்டித்தெரு பூந்தோப்பு பகுதியில் உள்ளது, சப்த கன்னியர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டது. சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி, நேற்று முதலாம் ஆண்டு பால்குட அபிஷேக விழா நடந்தது. முன்னதாக, கிராம தேவதை செல்லியம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், அம்மன், வெள்ளிக்கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், எல்லையம்மன் கோவில், அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, எல்லையம்மன் கோவிலில் இருந்து சிறுவர் - சிறுமியர் உள்ளிட்ட, 108 பெண்கள் பால்குடம் ஏந்திச் சென்று, சப்த கன்னியருக்கு அபிஷேகம் செய்தனர்.

பொன்னேரி: பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள, லட்சுமியம்மன் கோவிலிலும், 9ம் ஆண்டு, 108 பால்குட விழா, விமரிசையாக நடந்தது. காலை, 10:00 மணிக்கு, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள கன்னியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, சந்தனக்காப்பு மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அம்மனை தரிசித்த பெண்களுக்கு, மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு நித்ய பூஜையும், தொடர்ந்து காலை, 5:30க்கு கருடசேவையும், காலை, 9:00க்கு திருவேந்தி காப்பும், 9:30 மணிக்கு மகா சாந்தி ஹோமமும் நடந்தது. மாலை, 7:00 மணிக்கு திருமலை - திருப்பதி தேவஸ்தான அர்ச்சக சுவாமிகளால், ஸ்ரீவாரி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவாரி வெங்கடேசபெருமாள் வீதியுலாவும் நடந்தது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவிலில் இருந்து கன்னியம்மன் கோவில் நோக்கி, பம்பை, உடுக்கை ஒலி முழங்க, ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், கோவிலில் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள பல அம்மன் கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !